NEEK Movie Review Tamil : நடிகராக ரசிகர்களை பெற்ற தனுஷ், சமீப சில மாதங்களாக இயக்கத்திலும் அக்கறை காட்டி வருகிறார். அந்த வகையில், தனது அக்காவின் மகன் பவிஷை ஹீரோவாக வைத்து அவர் இயக்கியிருக்கும் படம்தான், ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. இந்த படத்தின் விமர்சனத்தை இங்கு பார்ப்போம்.
ஒரு வரிக்கதை:
காதலுக்கும்-காதல் தோல்விக்கும் இடையே இருக்கும் கோட்டில் மாட்டிக்கொண்ட இளைஞன். கடைசியில் கோட்டை விட்டது காதலையா? காதல் தோல்வியையா? என்பதைத்தான் இரண்டே கால் மணி நேர படமாக சொல்லியிருக்கிறார் தனுஷ்.
முழு கதை:
காதல் தோல்வியை கடந்து செல்ல முடியாமல் தவிக்கும் இளைஞன், பிரபு (பவிஷ்). இவனுக்கு கால் கட்டு போட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கின்றனர் இவனது பெற்றோர் (சரண்யா-ஆடுகளம் நரேன்). இதற்காக அவன் பார்க்கும் பிரீத்தி (பிரியா வாரியர்) கடைசியில் அவனது பள்ளி தோழியாக இருக்கிறார். இருவரும் பேசி பழக டைம் கேட்கின்றனர். திடீரென பிரபுவிற்கு அவனது முன்னாள் காதலியான நிலாவின் திருமண அழைப்பிதழ் வருகிறது. இதனால் தனது காதல் குறித்தும், காதல் தோல்வி குறித்தும் கதை சொல்ல ஆரம்பிக்கிறார் ஹீரோ.
பணக்கார பெண் நிலா-நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சமையல் கலை பயிலும் பிரபு, இருவரும் காதலிக்கின்றனர். இவர்களுக்கு இடையில் நிலாவின் பணக்கார அப்பா சரத்குமார் வில்லனாக வர, அங்கிருந்து இவர்களுக்கு பிரச்சனை ஆரம்பிக்கிறது. நிலாவின் நலனுக்காக பிரபு அவளை விட்டு பிரிய, இருவருக்கும் பிரேக்-அப் ஆகிறது.
இந்த கதையை கேட்கும் பிரீத்தி, திருமணத்திற்கு செல்லுமாறு பிரபுவிடம் சொல்கிறார். நிலாவுடன் வந்தால், அவளுடன் வாழ்க்கை, தனியாக வந்தால் பிரீத்தியுடன் வாழ்க்கை என்ற முடிவுடன் திருமணத்திற்கு செல்கிறான் ஹீரோ. நிலாவுக்கு யாருடன் திருமணம் நடந்தது? என்ற ஒரே ஒரு கேள்வியை நோக்கி மீதி கதை நகர்கிறது.
பள்ளி நாடகம் போல இருக்கே!
படத்தில், பிரேக் அப் பாடல் வருகிறது என்றால், அது எப்போது வர வேண்டும்? இடைவேளைக்கு முன்பு? இடைவேளைக்கு பிறகு? அல்லது 2-3 காட்சிகளுக்கு பிறகு? இந்த படத்தில் அதெல்லாம் இல்லை. எடுத்தவுடன் ஹீரோ இண்ட்ரோ ஆவதே பிரேக் அப் பாடல் மூலமாகத்தான். பணக்கார பெண்ணை நடுத்தர குடும்பத்து பையன் காதலிப்பது, அதற்கு அந்த பெண்ணின் தந்தை வில்லனாக மாறுவது, “என்னடா என் பொண்ண கரெக்ட் பண்ண பாக்குறியா?” என்று டைலாக் பேசுவது என எல்லாமே பழைய படங்களில் பார்க்கும் விஷயங்கள்தான், இந்த படத்திலும் இடம் பெற்றுள்ளது.
காட்சியமைப்புகள் அனைத்தும் லியோன் பிரிட்டோவின் கைவண்ணத்தில் அழகாக இருந்தாலும், பேசும் டைலாக்குகள் அனைத்தும் யதார்த்தமற்றதாக இருக்கிறது. இதனால், படம் பார்க்கையில் அது படம் பார்ப்பது போன்ற உணர்வை கொடுக்காமல் பள்ளி நாடகம் போன்ற உணர்வை அளிக்கிறது.
லவ் ஸ்டோரியா? க்ரிஞ்ச் ஸ்டோரியா?
இப்போதைய காலக்கட்டத்தில் நாம் பல விஷயங்களை ‘க்ரிஞ்ச்’ என்று சொல்லி ஒதுக்கி வைத்து விடுகிறாேம். இந்த படத்தில் 2கே கிட்ஸின் காதலை காண்பிக்கிறேன் என்ற பெயரில், எந்த சாமானியனுடனும் கனெக்ட் ஆகாத ஒரு கதையை சொல்ல முயற்சி செய்திருக்கின்றனர். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தையும், அப்படிப்பட்ட க்ரிஞ்ச் கதைகளுள் ஒன்று என கூறிவிடலாம். ஆனால், சில இடங்களில் நட்பு குறித்த டைலாக்குகளும், மிடில் கிளாஸ் பையன் குறித்த பஞ்ச் வசனங்களும் இருப்பதால், இக்கதையை முழுமையாக க்ரிஞ்ச் என சொல்ல மனம் மறுக்கிறது.
இளசுகளின் நடிப்பு..
தனுஷின் அக்கா பையன் பவிஷிற்கு இது முதல் படம் என்பதை அவரது கண்களே காட்டிக்கொடுத்து விடுகிறது. பார்ப்பதற்கும் பேசுவதற்கும் தனுஷ் போல இருக்கிறாரே அன்றி, நடிப்பில் துளி கூட அவரது மாமாவின் சாயல் தெரியவில்லை. பல இடங்களில் அவர் டைலாக் பேசுவது போல தெரியவில்லை, எழுதிக்கொடுத்திருப்பதை கொஞ்சம் உணர்ச்சிகளை கலந்து ஒப்பிப்பது போல இருக்கிறது. ஆனால், இவருக்கு ஜோடிகளாக நடித்திருக்கும் அனேகா, பிரியா வாரியர் ஆகியோர் தங்கள் கதாப்பாத்திரங்களை நியாயப்படுத்தி இருக்கின்றனர்.
இந்த படத்தின் நாயகர்களையும் நாயகிகளையும் எந்த கோணத்தில் பார்த்தாலும் பள்ளி செல்லும் சிறுவர்களை போலத்தான் பார்க்க தோன்றுகிறது. திடீரென்று இவர்களுக்கு திருமண காட்சிகள் எல்லாம் வரும் போது “என்னடா குழந்தைகளுக்கு கல்யாணம் பண்ணி வெக்கிறீங்க?” என கேட்க தோன்றுகிறது.
ரசிக்க வைத்த பாத்திரங்கள்:
ஹீரோ கூடவே சுற்றும் கார்த்திக் கதாப்பாத்திரத்தில் மாத்யூ தாமஸ், ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். ஆனாலும், பல இடங்களில் “இவரை இந்த படத்துல இப்படி வேஸ்ட் பண்ணிட்டாங்களே..” என்று கூற வைக்கிறது. இதே ஃபீலிங்தான், பிரியா வாரியருக்கும்.
அம்மாவாக வரும் சரண்யா பொன்வண்ணன் ஆங்காங்கே ஆங்கிலம் பேசி அசத்துகிறார். ஆனால், அந்த வசனங்களுக்கு கிளாப்ஸ்தான் வரவில்லை. இவர்களை தாண்டி, ஒரு பாடலுக்கு வந்த பிரியங்கா மோகன், சில நிமிடங்களே வந்த சரத்குமார் ஆகியோரும் கவனம் ஈர்க்கின்றனர்.
பாக்கலாமா? வேணாமா?
ஒரு படத்தை எடுத்துக்கொண்டால், நெகடிவ்-பாசிடிவாக எதை சொல்லலாம் என யோசிக்க தோன்றும். ஆனால், இந்த படத்தை பொறுத்தவரை பாசிடிவாக சொல்ல “கோல்டன் ஸ்பேரோ” பாடலை தவிர வேறு எதுவும் பெரிதாக தோன்றவில்லை. கோவா, சென்னை, மழை, மெரினா என காட்சிக்கு காட்சி கலர் சேருவதால் மட்டும் படம் நன்றாக செல்வது போல தோன்றுகிறது. ஆனால் உண்மையில், இது 2K Kids-க்கே பிடிக்காத 2K லவ் ஸ்டோரிதான். எனவே, பாக்கெட் நிறைய பணத்தை வைத்துக்கொண்டு அதனை செலவு செய்ய விரும்புபவர்கள் தாராளமாக சென்று இந்த படத்தை தியேட்டருக்கு சென்று பாருங்கள்..
ஏமாத்திட்டீங்களே தனுஷ்!
NEEK படத்தின் டிரைலர் வெளியாகும் போது தனுஷ் அதில் ஒன்று சொல்லியிருப்பார், “இது ஒரு சாதாரன காதல் கதைதான்..ரொம்ப எதிர்பார்த்து வராதீங்க” என்று. எதிர்பார்க்காமலேயே கதை இப்படி இருக்கிறதே..எதிர்பார்த்திருந்தால் இன்னும் எப்படி இருந்திருக்குமோ? என கேட்க தோன்றுகிறது. அதே போல, இது ஒன்றும் சாதாரண காதல் கதை அல்ல, கொஞ்சம் அசாதாரண (அனைவருக்கும் பிடிக்காத) காதல் கதைதான். எனவே தியேட்டரை விட்டு வெளியே வரும் போது “இப்படி ஏமாத்திட்டீங்களே சார்..” என அவரிடம் கேட்க தோன்றுகிறது.
மேலும் படிக்க | ஃபயர் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!
மேலும் படிக்க | Lesbian ஆக நடித்திருக்கும் லிஜோ மோல்! காதல் என்பது பொதுவுடமை திரைவிமர்சனம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ