சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாராகி எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'நிறம் மாறும் உலகில்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் பிரிட்டோ J B இயக்கத்தில் உருவாகியுள்ள 'நிறம் மாறும் உலகில்' எனும் திரைப்படத்தில் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா, நட்டி நட்ராஜ், ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர், நிவாஸ் ஆதித்தன், சல்மா, சுரேஷ் மேனன், 'ஆடுகளம்' நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ் காந்த், ரிஷி காந்த், கனிகா, ஆதிரா , காவ்யா அறிவுமணி, துளசி, ஐரா கிருஷ்ணன், லிசி ஆண்டனி, நமோ நாராயணன், சுரேஷ் சக்கரவர்த்தி, ஏகன், விஜித், ஜீவா சுப்ரமணியம், திண்டுக்கல் சரவணன், பாலாஜி தயாளன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
மேலும் படிக்க | GOAT vs Vidaamuyarchi: முதல் நாளில் எந்த படம் அதிக வசூல்? யார் ஓப்பனிங் கிங்?
தமிழ் திரையுலகின் பிரபலமான நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்திருக்கும் 'நிறம் மாறும் உலகில்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பட குழுவினருடன் 'பிக் பாஸ்' முத்துக்குமரன், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான தனஞ்ஜெயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இசையமைப்பாளர் தேவ்பிரகாஷ் பேசுகையில், ''இது என்னுடைய முதல் படம். இந்த படத்தில் பணியாற்றிய அனுபவம் வியப்பாகவும் , மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஒவ்வொரு கலைஞர்களுக்கும் சிறப்பு என்னவென்றால் அவர்களுடைய முதல் திரைப்படம். என்னுடைய முதல் திரைப்படமாக 'நிறம் மாறும் உலகில்' அமைந்ததில் மிகவும் சந்தோஷம். இதில் நடித்திருக்கும் பாரதிராஜா ஐயா, ரியோ அண்ணன், சாண்டி அண்ணன், நட்டி சார் உள்ளிட்ட பலருக்கும் இசையமைப்பேன் என நான் கனவில் கூட நினைத்ததில்லை. இதனை சாத்தியப்படுத்திய இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
நடிகர் சாண்டி மாஸ்டர் பேசுகையில், ''இங்கு வருகை தந்திருக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் நடிப்பில் ஜாம்பவான்கள். நான் மட்டும்தான் நடிப்பை பொறுத்தவரை பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் கலைஞர். கொரோனா காலகட்டத்தின் போது தான் நடிகர் மைம் கோபி எனக்கு நடிப்பு பயிற்சியை வழங்கினார். அவர் வழங்கிய சின்ன சின்ன குறிப்புகளை வைத்துக்கொண்டு தான் நான் நடித்துக் கொண்டிருக்கிறேன். நண்பர் ரியோ தான் பிரிட்டோவிடம் கதை இருக்கிறது. அதை நீங்கள் கேட்டுப் பாருங்கள். பிடித்திருந்தால் நடிக்கலாம் என ஆலோசனை சொன்னார். பிரிட்டோ என்னிடம் கதை சொன்ன போது அவர் கதை சொன்ன விதமும், கதையும் நன்றாக இருந்தது. ஏனெனில் 'லியோ'விற்கு பிறகு என்னை தொடர்பு கொள்ளும் இயக்குநர்கள் அனைவரும் சைக்கோ வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காகத்தான் அணுகினார்கள். அதனால் அதற்கு உறுதியாக மறுப்பு தெரிவித்து விட்டேன். இந்தப் படத்தின் கதையில் என் கதாபாத்திரம் ஜாலியானது. எனக்கு பாடல் இருக்கிறதா? எனக் கேட்டேன் இருக்கிறது என்று சொன்னார். இன்னும் உற்சாகமடைந்தேன். படம் சிறப்பாக வந்திருக்கிறது. 'நிறம் மாறும் உலகில்' மார்ச் 7ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
நடிகர் ரியோ ராஜ் பேசுகையில், ''நானும் இப்படத்தின் இயக்குநரான பிரிட்டோவும் திரையுலகில் நடிப்பதற்கான வாய்ப்புகளை ஒன்றாகத்தான் தேடத் தொடங்கினோம். அதன் பிறகு திடீரென்று ஒரு நாள் நான் இயக்குநராக போகிறேன் என்று சொன்னார். நண்பரான எனக்கு இது ஆச்சரியமாக இருந்தது. அதன் பிறகு கதையை எழுதி சொன்ன பிறகு உண்மையிலேயே வியந்தேன். அவர் இயக்கும் முதல் திரைப்படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் நடித்த முதல் மியூசிக் ஆல்பத்தின் இயக்குநரும் அவர்தான். அறிமுக இசையமைப்பாளரும் , என்னுடைய நண்பருமான தேவ் பிரகாஷின் திறமை - இந்த படம் வெளியான பிறகு பெரிய அளவில் பேசப்படும் என நம்புகிறேன். ஒரு நல்ல திரைப்படத்திற்கான அடையாளமாக நான் எதனை பார்க்கிறேன் என்றால் திரைப்படத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரும் தங்களுக்கான பங்களிப்பை முழுமையாக செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் போது தான். அதனால் இந்த படத்தில் படத்தொகுப்பாளரும் கடுமையாக உழைத்திருக்கிறார்'' என்றார்.
மேலும் படிக்க | ஈ அடிக்கும் தியேட்டர்கள்? விடாமுயற்சி படத்தின் 1 வார வசூல் இவ்வளவு தானா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ