ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களின் நிலுவை தொகை.. அமைச்சர் சிவசங்கர் சொன்ன குட் நியூஸ்!

இலாப நோக்கம் இல்லாத ஒரே துறை போக்குவரத்து துறை- இந்தியாவிலேயே அரசு போக்குவரத்து துறையில் பிற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

Written by - R Balaji | Last Updated : Feb 20, 2025, 08:58 PM IST
  • ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்கள் நிலுவை தொகை வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
  • அமைச்சர் சிவசங்கர் மதுரையில் பேட்டி
ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களின் நிலுவை தொகை.. அமைச்சர் சிவசங்கர் சொன்ன குட் நியூஸ்!  title=

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் புதிய விரிவான சிற்றுந்து திட்டம் 2024 தொடர்பாக மதுரை, கோயம்புத்தூர், விருதுநகர், திருநெல்வேலி ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட LDGOOTL60 அலுவலரக்ள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று (பிப்.20) நடைபெற்றது.

இந்நிகழ்வில், முதன்மை செயலாளர் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சுன்சோங்கம் ஜடக், மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படவுள்ள புதிய விரிவான சிற்றுந்து திட்டம் - 2024 மூலம் இதுவரை எத்தனை புதிய வழித்தடங்கள் தேர்வுசெய்ப்பட்டுள்ளது என்பது குறித்தும், தேர்வு செய்யப்பட்ட வழித்தடங்களில் எவையெல்லாம் மாவட்ட அரசிதழில் வெளிவந்துள்ளது என்பது குறித்தும் ஒவ்வொரு மண்டலங்களுக்குட்பட்ட மாவட்டங்கள் வாரியாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆய்வு செய்தார். 

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் சிற்றுந்து இயக்குவது தொடர்பாக எத்தனை விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளது என கேட்டறிந்த போக்குவரத்துத்துறை அமைச்சர், சிற்றுந்து திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களிடமும் கருத்துக்களை கேட்டு சிற்றுந்து இயக்கம் தேவைப்படும் வழித்தடங்கள் குறித்தும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் படிங்க: தமிழக பட்ஜெட் 2025: தொழிலாளர்களுக்கு என்ன செய்யப்போகிறது திமுக அரசு? எதிர்பார்ப்புகள் இதுதான்

இதனைத் தொடர்ந்து, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, "தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி, புதிய மினி பேருந்து திட்டம் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், அதற்காக ஒப்பந்தம் வெளியிடப்பட்டு புதிய மனுக்களும் பெறப்பட்டு வருகின்றது. இதுதொடர்பாக தமிழ்நாடு முழுவதும் ஆய்வு நடைபெற்று வருகிறது. 

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையிலும், இன்று காலை பெரம்பலுரிலும் மண்டல அலுவலரக்ள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக, தமிழ்நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களுக்குட்பட்ட மாவட்டங்களில் இத்திட்டம் தொடர்பான முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுடைய ஆட்சி காலத்திலேயே மினி பேருந்து இயக்கம் என்ற சிறப்பான திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது மேலும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு, பேருந்துகள் செல்ல முடியாத குக்கிராமங்களுக்கும் மினி பேருந்து சேவையை நீட்டித்து, அதன் மூலம் அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் போக்குவரத்து வசதி பெறுவதுடன், மற்ற இடங்களுக்கும் போக்குவரத்து இணைப்பு கிடைக்கும் என்பதற்காக மினி பேருந்து சேவை திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் ஏற்கனவே மொத்தம் 2,870 மினி பேருந்து வழித்தடங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் வழித்தடம் மறுசீரமைப்பு தொடர்பாக 504 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. மேலும், இத்திட்டத்தின் கீழ் இதுவரை 1,810 வழித்தடங்கள் கண்டறியப்பட்டு அவற்றில் 1,255 வழித்தடங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. 

தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களுக்குட்பட்ட மாவட்டங்களில் மட்டும் மொத்தம் 878 புதிய விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. வழித்தடத்திற்கு விண்ணப்பம் செய்வதற்கு இன்னும் 2 வார கால அவகாசம் இருப்பதால் கூடுதல் விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகின்ற மே.1ஆம் தேதியன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரால் இத்திட்டம் தொடங்கி வைக்கப்படவுள்ளது.

போக்குவரத்துத்துறை இலாப நோக்கம் அல்லாது சேவை நோக்கில் செயல்படும் துறை. இந்தியாவிலேயே அரசு போக்குவரத்துத்துறையில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது. பேருந்து கட்டணத்தைப் பொறுத்தவரையில் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி 8,000 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி நிறைவேற்றப்பட்டு அவற்றில் 3,000 பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 5,000 புதிய பேருந்துகள் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும், நடப்பாண்டில் கூடுதலாக 3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். 

ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்து பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள பணப்பலன்களை வழங்குவதற்கு கடந்த மாதம் ரூபாய் 300 கோடியும் இம்மாதம் ரூபாய் 250 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிலுவையிலுள்ள பணப்பலன்கள் படிப்படியாக வழங்கப்படும்" என தெரிவித்தார்.

மேலும் படிங்க: முடிந்தால் அண்ணா சாலைக்கு வர சொல்லுங்க - அண்ணாமலைக்கு உதயநிதி சவால்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News